ஆகமம்
ஆகமங்கள்
வேதமும் ஆகமமும் இறைவன் உண்மையை எடுத்துரைக்கும் நூல்களாகும். வேதம் பொது நூல் என்றும்.ஆகமம் சிறப்பு நூல் என்றும் கொள்ளப்படுகின்றது. வைணவ ஆகமங்கள், சங்கிதைகள் எனவும் சாக்த ஆகமங்கள் தந்திரங்கள் எனவும் பெயர் பெறுவதால் ஆகமம் என்பது சிறப்பாக சைவ ஆகமங்களையே கருதுகின்றது. சைவ சமயத்திற்கு காமிகம் முதல் வாதுளம் வரையான 28 ஆகமங்கள் உள்ளன. இவை தவிர நாரசிங்கம் அல்லது மிருகேந்திரம் முதல் விசிவாண்மகம் ஈறான 207 உபாகமங்கள் உள்ளன.
ஆகமம் என்னும் சொல், ஆ-பாசம், க- பசு , ம-பதி எனப் பொருள் கொள்வதகையால் முப்பொருளுன்மையை உணர்த்தல் என்றும் ,ஆ – ஞானம் , க-மோட்சம்,ம- மலநாசம் என இன்னோர் விதத்தில் பொருள் கொள்வதகையால் ஆன்மாக்களுக்கு மலத்தை நாசம் பண்ணி சிவஞானத்தை உதிப்பித்து மோட்சத்தை கொடுத்தல் என்னும் பொருள்களை விளக்கி நிற்கின்றது.
ஆன்மாக்கள் கடவுளை வழிபட்டு வீடுபேறு அடைய வேண்டுமென்ற குறிக்கோளையுடைய ஆகமங்கலானது ஆலயங்களின் அமைப்பு ,விக்கிரகங்களின் அமைப்பு ,கோயில் கிரியைகள், வழிபட செய்யும் முறை ,சைவ சாதனங்கள்(நாற்பாதங்கள்) பற்றியும் விளக்கமாகக் கூறும் பிராமண நூல்களாகவும் ,சிறப்பு நூல்களாகவும் விளங்குகின்றன.
ஆகமங்களின் தோற்றம்
ஆகமங்கள் இறைவனால் அருளப்பட்டவையாகும். இதனை பல்வேறு ஆதாரங்களிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
மாணிக்கவாசகர் “ஆகமம் ஆகி நின்று அன்னிபான்” எனவும் “ மண்ணுமாமலை மகேந்திரமதனிற் கொள்ள ஆகமம் தோற்றுவித்துதருளியும்” எனப்பாடுகின்றார்.
திருமூலர்ஆகமம் பற்றிக் கூறியதை “சுந்தர ஆகமம் சொல் மொழிந்தானே” என்ற குறிப்புத் தெளிவுபடுத்துகின்றது. திருமூலர் இறைவனால் ஆகமம் அருளப்பட்டதை “தானாய் அடியார்கள் அர்ச்சிக்கும் நந்தி உருவாகி ஆகமம் ஓங்கி நின்றாளே” என்றும் கூறுகின்றார்.
ஆகமங்கள் சிவபெருமானின் ஐந்து முகத்திலிருந்தும் தோற்றம் பெற்றதாகவும் கூறப்படுகின்றது.ஆகமங்கள் 28 இனுள் காமிகம் முதல் ஐந்தும் இருசியின் பொருட்டு இறைவனின் சத்தியோசதா முகத்தினின்றும் கூறப்பட்டதாகவும்,விஜயம் முதல் ஐந்து ஆகமங்கள் அகோர முகத்திலிருந்து பரத்துவாச ரிஷியின் பொருட்டு கூறப்பட்டதாகவும்,தீபதம் முதல் ஐந்தும் காஷிபிரிஷியின் பொருட்டு வாமதேவ முகத்தினின்று கூறப்பட்டதாகவும், ரௌரம் முதலிய ஐந்து கௌதமரிசியின் பொருட்டு தற்புருட முகத்தில் இருந்து கூறப்பட்டதாகவும் புரோகிதம் முதலிய எட்டும் இறைவனின் ஈசான முகத்தினின்றும் அகத்திய ரிசியின் பொருட்டு அருளப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
உமாபதி சிவாச்சாரியார்ஆகமங்களின் தோற்றம் பற்றி பின்வருமாறு கூறுகின்றார். “சதாசிவ மூர்த்தியால் அநந்த தேவருக்கும் ,அநந்ததேவரால் சிறிகண்டருக்கும். சிறிகண்டரால் தேவர்களுக்கும், தேவர்களால் முனிவர்களுக்கும் முனிவர்களால் மனிதருக்கும், மனிதரால் மனிதர்களுக்கும் உபதேசம் செய்யப்பட்டது.” எனக் கூறுகிறார்.
ஆகமங்களில் காணப்படும் கடவுட் கோட்பாடு
ஆகமம் பதி, பசு ,பாசம் என்னும் முப்பொருள் உண்மையை விளக்குகின்றது. ஆகமத்தின் கடவுட் கோட்பாட்டினை நோக்கும்போது அது உபநிடதக் கடவுட் கோட்பாட்டினை அடிப்படையாக கொண்டதாக காணப்படுகின்றது. கடவுள் ஆன்மா இவ்விரண்டிற்கும் இடையிலான தொடர்பு,வேற்றுமை என்பவற்றை உபநிடதங்கள் புலப்படுத்துகின்றன. கடவுளின் இயல்புகள் கடவுளை வழிபட்டு முத்தியடைவதற்கான வழி என்பன உரையாடல், ஆராய்ச்சி மூலமாக தெளிவு படுத்தப்படுகின்றன.
கடவுள் இங்கு பிரமம் எனவும்,பரமான்மா எனவும் உயிர்கள் சீவான்மா எனவும் அழைக்கப்பட்டுள்ளன. கடவுள் அநாதியானவர்.அவர் எங்கும் நிறைந்தவர், உலகின் தோற்றத்திற்கு ஆதாரமே இறைவன் என்று கூறுகின்றது.சுவதோஸ்வர உபநிடதம் உருத்திரனே பிரமம் அவனே முழுமுதற் தெய்வம் என்று ஒரு பொருட் கடவுட்கோட்பாட்டினை வலியுறுத்துகின்றது. மேலும் ஆகமத்தில் பதி பசு பாசம்பற்றிய கருத்துக்களை கூறுகின்ற ஞானாபாதத்திலும் கடவுள் ஒன்று என்ற கருத்து வலியுறுத்தப்படுகின்றது.
வைணவ பஞ்சாத்திர ஆகமத்தில் உலகில்அறத்தை நிலை நாட்டும் இறைக்கோட்பாடு விளக்கபடுகின்றது.தமிழ் ஆகமம் என்று அழைக்கப்படும் திருமந்திரம் ஆகமக் கருத்துக்களை தமிழில் சிறப்பாக விளக்குகின்ற ஒரு நூலாகும். இதில் கடவுள் பற்றிய கருத்துக்களை நோக்கும்போது அதில் பதி,பாசம் என்பவை அநாதி என்பதை பின்வரும் பாடலடி எடுத்துக் கூறுகின்றது.
“பதி பசு பாசம் எனப்பகர் மூன்றிற் பதியினைப் பொற் பசு பாசம் அநாதி”
இதிலிருந்து பதியானது அநாதியானது என்ற கருத்து வலியுறுத்தப்படுகின்றது.இவ்வாறு ஆகமங்கள் கடவுள் பற்றிய கோட்பாட்டினை எடுத்துக் கூறுகின்றன.
சமய வழிபாடு
பசுவின் உடலிலுள்ள பாலை அதன் மடியிலுருந்து மட்டுமே பெறுதல் முடியும்.உலகெங்கும் வியாபித்து இருக்கும் இறைவனை வழிபட்டு அவனருள் பெற ஆலயங்கள் அவசியமாகின்றன என ஆகமங்கள் கூறுகின்றன.ஆகமங்களில் ஆலயங்களை அடிப்படையாக் கொண்ட பக்தி சார்ந்த வழிபாடே முக்கியம் பெறுகின்றது.நித்திய,நைமித்திய,காமிய,நிஸ்காமிய கிரியை முறைகள் பற்றியும் கூறுகின்றன.அடுத்து பலவித கிரியைகள் பற்றியும் ,கும்பம் வைத்து வழிபடல் மேலும் யாகங்களைச் செய்யவேண்டியமுறை பூசைகள்,ஆராதனைகள்,அர்ச்சனைகள்,அபிசேகங்கள் முதலியன கூறப்படுகின்றன.
ஒவ்வொருவருக்கும் தீட்சை எடுப்பதன் அவசியத்தையும் தீட்சை வகைகளையும் எடுத்துக் கூறுகின்றது.மேலும் ஆகமங்கள் மூர்த்தி தலம்,தீர்த்தம் முதலியன பற்றியும் சிவதீர்தத்தில் நீராடினால் பாவங்கள் தீரம் என்றும் இவற்றை விட பண்டிகைகள் பற்றியும் எடுத்துக் கூறுகின்றன. இவ்வாறு சமய வழிபாடு சார்ந்த விடயங்களை விரிவாக எடுத்துக் கூறுவதில் ஆகமங்கள் சிறப்பிடம் பெறுகின்றன.
முத்திநெறி
ஆகமமானதுஅவரவர் பக்குவ நிலைக்கு ஏற்ற வகையில் பின்பற்றக் கூடிய வகையில் சரியை,கிரியை,யோகம்,ஞானம் ஆகிய நாற்பதங்களை பற்றி எடுத்துக் கூறுகின்றது.இந்த நான்கும்இறைவனை அடைவதற்கு உதவும் சாதனங்கள் என்று கூறப்படுகின்றது. சரியை மூலம் சாலோக முத்தியையும் ,கிரியை மூலம் சாமீப முத்தியையும் ,யோகம் மூலம் சாருப முத்தியையும் ஞானம் மூலம் சாயுச்சிய முத்தியையும் பெறலாம். ஆன்மா சிவமாகும் தன்மைபெற்று சிவத்தோடு கலந்து அனுபவிக்கும் இன்பமே பேரின்பம். இதனையே சாயுச்சிய முத்தி என்றும் பரமுத்தி என்றும் கூறுவர்.
ஒவ்வொருவருக்கும் மத்தி பெறுவதற்கு முதலில் தீட்சை பெறவேண்டும் எனவும் அதன் பிற்பாடு மெய்யுணர்வு பெறுவதற்காக இந்த நாற்பாதங்களையும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கூறுகின்றது. வைணவமரபினர் ஸ்ரீவைகுண்டத்தை அடைதலையும் பிரபக்தி யோகமாகிய முத்தியை அடைதலையும் கூறுகின்றது.