குடையின் சுயசரிதை
இன்று குப்பை மேட்டில் நான் தேடுவாரற்றுக் கிடக்கிறேன். அன்று நானிருந்த நிலையினை எண்ணிப் பார்க்கும் போது வேதனையால் வாடுகிறேன். என் கதையைக் கேட்க நீங்கள் விரும்புவீர்கள். சொல்கிறேன். கேளுங்கள்.
நான் இங்கிலாந்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் உருவாகினேன். பல வர்ணங் கொண்ட என்னைப்போல் அங்கு பல்லாயிரக் கணக்கானோர் உருவாக்கப்பட்டனர்.
எங்களை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு நாள் பல லொறிகளில் ஏற்றினார்கள். துறைமுகம் ஒன்றிற்கு அனுப்பி வைத்தார்கள்.
அங்கிருந்து எங்களை எல்லாம் கப்பலில் ஏற்றினார்கள். சில நாட்கள் கப்பலில் பயணம் செய்தோம். பின்னர் கொழும்புத் துறைமுகத்தை வந்து சேர்ந்தோம்.
கொழும்புத் துறைமுகத்திலிருந்து எங்களைக் கடை முதலாளி ஒருவர் லொறி ஒன்றில் ஏற்றிச் சென்றார். அவர் தமது கடையில் எங்களையெல்லாம் அலுமாரிகளில் பத்திரமாக அடுக்கி வைத்தார்.
ஒருநாள் பெண்மணி ஒருவர் நான் இருந்த கடைக்கு வந்தார். என்னைப் பணம் கொடுத்து வாங்கிச் சென்றார். அவர் தமது அருமைப் பேரனுக்கு என்னைக் கொடுத்தார்.
அவன் என்னை அன்பாக எடுத்து விரித்துப் பார்த்தான். “ஆகா! அழகானகுடை” என்று கூறி மகிழ்ந்தான். அச் சிறுவன் என்னைப் பத்திரமாகப் பேணிவந்தான்.
பாடசாலைக்குச் செல்லும் போதெல்லாம் தனது புத்தகங்களுடன் என்னையும் எடுத்துச் செல்வான் மழை, வெயில் எதற்கும் என்னைப் பயன்படுத்தினான்.
ஒருநாள் மாலை வேளை அச்சிறுவன் என்னை எடுத்துக் கொண்டு கடைக்குப் போனான். அங்கு பல வகையான பொருட்களை வாங்கினான். பொருட்களை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினான். ஞாபகமின்றி என்னைக் கடையில் விட்டுச் சென்று விட்டான். அவ்வேளையில் அங்கு வந்த மற்றொரு சிறுவன் என்னை எடுத்துச் சென்றுவிட்டான்.
அவன் என்னைப் பத்திரமாகப் பேணிவந்தான். ஒரு நாள் வீட்டு மேசையின் மேல் என்னை வைத்துவிட்டுப் பாடசாலைக்குச் சென்றுவிட்டான். அன்றிரவு மேசையின் மேல் இருந்த என்னை எலியொன்று பதம் பார்த்து விட்டது. அதன் கூரிய பற்களுக்கு எனது உடலின் சில பகுதிகள் இரையாகி விட்டன். மறுநாள் காலை அச்சிறுவன் என்னை எடுத்து விரித்தான்.
ஐயோ! பாவம், என் கோலத்தைக் கண்டதும் அவன் அழுதேவிட்டான். தனது தாயாரிடம் ஓடோடிச் சென்று முறையிட்டான். என் செய்வது? என் நிலையைக் கண்டு அவனது தாயாரும் கவலைப்பட்டார். அச்சிறுவனுக்கு ஆறுதல் கூறி அழைத்துச்சென்றார்.
நாட்கள் சென்றன. நான் ஒரு மூலையில் கிடந்தேன். எனது நிலை பெரும் கவலைக்கிடமாகி விட்டது. நாள்தோறும் பூச்சிகளும், எலிகளும் என்னைப் பதம் பார்த்தன. ஒரு நாள் அவ் வீட்டுக்காரப் பெண்மணி என்னைத் துாக்கி இக்குப்பை மேட்டில் வீசிவிட்டார். இங்கு நான் தேடுவாரற்றுக் கிடக்கின்றேன். எனது இன்றைய நிலையை எண்ணும் போது மிக்க வேதனை ஏற்படுகிறது. என் கவலையைப் போக்குவார் யாருளர் ?