நான் பார்த்த கண்காட்சி…!
நான் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் கல்வி பயில்கிறேன். எங்கள் பாடசாலையில் கடந்த சித்திரை மாதம் பத்தாம் திகதி (10-04-2021) கல்வி கண்காட்சி ஒன்று நடைபெற்றது.
ஆறாம் வகுப்பு மாணவர்கள் முதல் உயர்தர வகுப்பு மாணவர்கள் வரை உருவாக்கிய பல்வேறு பொருட்களும், ஆசிரியர்கள் தயாரித்த கற்பித்தல் உபகரணங்களும், இக் கல்விப் பொருட்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
ஆறாம் வகுப்பு மாணவர்கள் பல்வேறு கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி ஆக்கிய மாலைகள், பொம்மைகள் ஆகியனவும் அவர்கள் வரைந்த சித்திரங்களும் இக்காட்சியில் என் கவனத்தை ஈர்த்தன.
சில மாணவர்கள் தாங்கள் விரும்பிப் பாடும் பாடல்களைத் தொகுத்து “எங்கள் புத்தகம்” என்ற பெயரில் காட்சிக்கு வைத்திருந்தனர். இவர்கள் தென்னம் குரும்பை, ஈர்க்கு ஆகியவற்றைப் பயன்படுத்தி அழகிய தேர்களையும் ஆக்கியிருந்தனர்.
“தேர் வருகுது தேர் வருகுது” என்ற தலைப்பில் இத்தேர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமை பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.
எங்கள் வகுப்பு மாணவர்கள் (தரம் எட்டு) இலங்கையின் வடிவமைப்பைக் களி மண்ணினாற் செய்து அழகிய நிறம் தீட்டியிருந்தனர். இதில் மகாவலிகங்கை, பீதுருதாலகாலமலை, சிவனொளிபாதம் போன்றவற்றையும் குறிப்பிட்டுக் காட்டியிருந்தனர்.
பத்தாம் பதினொராம் வகுப்பு மாணவர்கள் மீனவர்களின் தொழிலைச் சித்திரிக்கும் வகையில் கடலில் மீன்பிடித் தொழில் நடைபெறும் முறையினைப் பல்வேறு உருவங்களின் மூலம் அழகுற அமைத்திருந்தனர்.
தற்போதைய சூழ்நிலைக்கு அமைய இது அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
உயர்தர வகுப்பு மாணவர்கள் மட்டைகளினாலும் ரெஜிபோம்களினாலும் உருவாக்கிய ரோபோ ஒன்றினை காட்சி படுத்தியிருந்தனர், இது பார்ப்போர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
எங்கள் பாடசாலை மனையியற் கல்வி பயிலும் மாணவர்கள் தயாரித்த மனையியற் பொருட்களும் கைப்பணிப் பொருட்களும் இப் பொருட்காட்சியில் முக்கிய இடம் பெற்றன.
ஆசிரியர்கள் ஆக்கிய கற்பித்தல் உபகரணங்கள் மாணவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பெரும் பயன் நல்குமென்பது திண்ணம். எங்கள் விஞ்ஞான பாட ஆசிரியை ஆக்கிய கற்பித்தல் உபகரணங்களை நாங்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தோம்.
கோட்டக்கல்வி அதிகாரி, கல்விப்பணிப்பாளர் ஆகியோர் இப் பொருட்காட்சிக்குப் பிரதம அதிதிகளாக அழைக்கப் பட்டிருந்தனர். அவர்கள் எங்கள் பாடசாலையில் நடைபெற்ற இப் பொருட்காட்சியைப் பார்வையிட்டுப் பெரிதும் பாராட்டினர்.