பாரதியார் பாடல்கள் – G.C.E A/L
க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான, பாரதியார் பாடல்கள்
- குயிற்பாட்டு
- கண்ணம்மா என் காதலி
- பாஞ்சாலி சபதம்
- பெண் விடுதலை
சுப்ரமணிய பாரதியார்
சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்டார்.
(அ) குயிற்பாட்டு
குயிற்பாட்டு, பாரதி பாடிய குறுங்காவியங்களுள் ஒன்று. அது மானுடரையும் விலங்குகளையும் வைத்து, புனையப்பட்ட வேடிக்கையான கற்பனைக் கதை. மாஞ்சோலை ஒன்றிலிருந்த குயிலொன்று பாடிய இன்னிசை கீதத்தில், தன் மனதைப் பறிகொடுத்த கவிஞர், அது கூறிய காதற்கதையினை செவிமடுக்கிறார்.
அச்சந்தர்ப்பத்தில் குயில் இயற்கையின் கீதங்களிலும், பெண்கள் இசைக்கும் இனிமையான கீதங்கள், நாட்டார் பாடலிசையிலும் கருவிகளின் இன்னோசையிலும் மனதைப் பறிகொடுத்தமை பற்றி எடுத்துரைக்கும் பகுதியே
இங்கு இடம்பெற்றுள்ளது.
ஆ) கண்ணம்மா என் காதலி
கண்ணனைப் பல நிலைகளில் பாவனை செய்து பாரதியால் பாடப்பட்ட பல பாடல்கள் காணப்படுகின்றன. அவை கண்ணன் பாடல்கள் எனப் பெயர் சூட்டப் பெறுகின்றன. கண்ணனை காதலியாகப் பாவனைசெய்து பாடிய பாடல்களுள் ஒன்றாக, “கண்ணம்மா என் காதலி” அமைகிறது. முப்பெரும் கவிதைகளுள் ஒன்றாக அமையும் “கண்ணன் பாட்டு” தொகுதியில் 23 தலைப்புக்களிலான பாடல்கள் உள்ளன. கண்ணன் மீது அதீத பக்தி கொண்ட பாரதியார் கண்ணனைத்
தோழனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக, அரசனாக, சீடனாக, சற்குருவாக, கண்ணம்மா எனும் குழந்தையாக, விளையாட்டுப் பிள்ளையாக, காதலனாக, காந்தனாக, கண்ணம்மா எனும் காதலியாக, ஆண்டவனாக, குலதெய்வமாக பல்வேறு உறவுகளில் கற்பனை செய்து பாடியுள்ளார்.
(இ) பாஞ்சாலி சபதம்
மகாபாரதத்தில் தருமன், கௌரவர்களுடன் சூதாடி நாடு நகர் எல்லாம் இழந்து, இறுதியில் பாஞ்சாலியையும் பணயம் வைத்து இழக்கிறான். பாஞ்சாலி துரியோதனன் சபையிலே அவனால் மானபங்கப்படுத்தப்படுகிறாள். ஆந்நிலையில் பாஞ்சாலி தர்மாவேசத்தோடு துரியோதனை அழித்தே தன் குழல் முடிப்பதாகச் சபதம் செய்கிறாள். அச்சபத நிகழ்ச்சியை மையமாகக்கொண்டு மகாபாரதக் கதைப்
பகுதியை பாரதி, புதுமைகளோடு குறுங்காவியமாக, „பாஞ்சாலி சபதம்‟ என்ற பெயரில் படைத்துள்ளார். துரியோதனனோடு சூதாடிய தருமன், தேசத்தைப் பணயப் பொருளாக வைத்தது கண்டு கொதித்தெழுந்து கூறுவதாக அமைவது இப்பகுதி.
(ஈ) பெண் விடுதலை
தேசிய விடுதலை, பெண் சமத்துவம் என்பவற்றில் தீவிர ஈடுபாடுகாட்டிய பாரதி சீனமொழியில் “சீயூசன்” என்பவர் பாடிய கவிதையை மொழிபெயரத்துப் பாடியதே பெண் விடுதலை எனும் இக்கவிதை. ஆணும் பெண்ணும் சமமானவர்கள். பெண்களை ஆண்கள் அடக்கி ஆள்வது பொருத்தமற்றது. பெண்கள் தம் பெருமை உணர்ந்து ஒன்றுபட்டு விடுதலை பெற முயல வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது. பெண்கள் விடுதலை பெற்று தேசத்தின் விடுதலைக்காக ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதாக இக்கவிதை அமைந்துள்ளது.