பூச்சிகளை உண்ணும் செடி!
பிச்சர் பிளான்ட் (Pitcher Plant) என்னும் செடியே ஊன் உண்ணும் செடி என அழைக்கப்படுகிறது. அது பூச்சிகளை மட்டுமே இரையாகக் கொள்கின்றது. பிச்சர் பிளான்ட் என்பதை பானைச்செடி அல்லது கூஜாச் செடி என்றும் கூறலாம்.
இந்தச் செடியின் இலை கூஜா போன்ற வடிவுடையது. அந்தக் கூஜாவின் வாய்ப்பகுதியில் தேன் போன்ற இனிப்பான திரவம் ஒன்று காணப்படும்.
அது வழுக்கும் தன்மை உடையது. தேனீ முதலிய சிறிய பூச்சிகள் அந்த இனிப்பை சுவைப்பதற்காக, கூஜாவின் வாயில் வந்து அமர்கின்றன.
அப்போது அவை வழுக்கி அந்தக் கூஜாவின் உள்ளே விழுந்துவிடுகின்றன. இவ்வாறு வீழ்ந்த பூச்சிகளை அந்தக் கூஜாவின் உள்ளே இருக்கும் ரோமம் போன்ற தும்புகள் அழுத்திப் பிடித்துக்கொள்கின்றன.
அது மாத்திரமல்ல, அந்தக் கூஜாவின் முடியும் மூடிக்கொள்ளும். கூஜாவின் உள்ளே சிக்கிக்கொண்ட பூச்சியை அங்கே ஊறி வரும் ஒரு திரவம் கரைத்துவிடும்.
அப்போது, செடி அந்தக் கரைசலை உறிஞ்சிவிடும். இதன் பின்பு கூஜாவின் மூடி மீண்டும் திறந்து கொள்ளும்.
இந்த வகையான தாவரங்கள் அனேகமாக, அடர்ந்த காடுகளிலேயே காணப்படுகின்றன.