காரணமாலை – G.C.E A/L Guide

காரணமாலை
சீறா சரிதத்தை இசைத்தமிழால் பாடப்பட்ட நூல் “காரண மாலை” ஆகும். இஸ்லாமிய அற்புதச் செயல்களைக் (முஃகிஸாத்துக்கள்) காரணங்கள் என்று அழைக்கப்படுவதுண்டு. அற்புதச் செயல்களாகிய (காரணங்களாகிய) மலர்களாலான
மாலை என்ற பொருளில், இந்நூலுக்குக் “காரணமாலை” என்னும் பெயர் வழங்குவதாயிற்று எனக் கருதலாம். கி.பி 1878 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நூலினை அச்சிட்ட வரலாறு 154 அடிகளாலான ஆசிரியப் பாவினால் நூலின் தொடக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நூலானது நாடகவடிவில், உருவாக்கப்பட்டதால் “சீறா நாடகம்” எனவும் அழைக்கப்படும். நீண்டதும் சிறியதுமான 263 இசைப் பாடல்கள் நூலில் காணப்படுகின்றன. காப்பு, கடவுள் வாழ்த்து ஆகியவற்றுடன் நபிகள் நாயகம் பூர்வீகத்திலுண்டான சிறப்பு முதலாக வாழிச்சிறப்புஈராக 26 தலைப்புக்களின் கீழ் இசைப்பாடல்கள் இராகம், தாளம் என்பவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளன. கலித்துறை, சகம், கொச்சகக்
கலிப்பா, அகவல், வெண்பா, விருத்தம், தரு அல்லது கண்ணி, ஆகிய செய்யுள் யாப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எளிமையும், பொருண்மையும் நிறைந்த பாடல்கள் இஸ்லாமிய மரபின் அடியொற்றியவையாகவும், இறை நம்பிக்கையை
ஊட்டுவனவாகவும் மிளிர்கின்றன.
ஆசிரிய விருத்தங்களும் தருக்களும் நூலில் அதிகம் காணப்படுகின்றன. இசையோடிணைந்த வரலாறுகளாகையால் படிக்குந்தோறும் இன்பமூட்டுவதாய் விளங்குகிறது. பூபாளம், மோகனம், நாட்டை, கல்யாணி, ஆனந்த பைரவி உட்பட 20 இராகங்களில் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன.