சாந்தி நிலவ வழி …!
மனிதன் நிம்மதியாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வாழ வழிவகுப்பது சாந்திநிலவும் சூழ்நிலையேயாகும். சாந்தி என்பது அமைதி என்னும் கருத்தில் அமைந்த ஒரு சொல்லாகும்.
முதலிலே குடும்பத்தில் தோன்றிய சாந்திநிலவுஞ் சூழ்நிலை சமுதாயம், நாடு, உலகம் என்று விரிந்து கொண்டே போகும்.
அமைதியானது முதலிலே ஒருவருடைய மனத்திலே எழ வேண்டும். இதனை நற்பழக்கங்களாலும், பெரியோர் தம் நட்பினாலும், தெய்வ நம்பிக்கையாலும் சிறந்த நூல்களை வாசிப்பதாலும் ஏற்படுத்திக் கொள்ளலாம்.
குடும்ப உறுப்பினர் ஒருவருடைய மனத்திலே ஏற்பட்ட அமைதி குடும்ப அங்கத்தவர்களிடையே பரிணமிக்கின்றது.
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்குந் தன்மையும் அன்புடைமையும், மற்றவர் சொல்வதைக் கேட்குந் தன்மையும் குடும்பச் சூழலிற் சாந்தி நிலவ வழி வகுக்கும்.
எமது சமுதாயத்தில் எல்லோரும் எல்லாம் பெற்று இல்லாமை இல்லாமற் போக வேண்டும். இப்படியிருந்தால் உலகம் உய்யும். ஏட்டுக்கல்வியை மட்டும் கற்று அரச பதவிகளை மட்டும் நம்பியிருப்பதை விடுத்து தொழிற்கல்வியை, விவசாய அறிவை நாம் பெற வேண்டும்.
காடு, கரம்பைகளைத் திருத்திக் கழனிகளாக்க வேண்டும். பயன்தரும் பயிர் வகைளைத் தரிசு நிலங்களெங்கும் பயிரிட வேண்டும்.
பசுமைப் புரட்சியை உருவாக்க வேண்டும். இதனால் வேலையில்லா திண்டாட்டம் ஒழியும், பொருளாதாரம் சிறக்கும், நாட்டில் சாந்தி நிலவ வழிபிறக்கும். விரக்தி மனப்பான்மை மறையும்.
இன்று உலகில் சமய, இன, நிற வேறுபாடுகள் மனித குலத்தின் சாந்திக்கு ஊறு விளைவிக்கின்றன. இவற்றிற்கெல்லாம் அன்பு வழியில் நாம் தீர்வு காண வேண்டும்.
“உன்னைப் போல் உன் அயலவனையும் நேசி” என்ற இயேசுகிறிஸ்துவின் போதனைகளையும், ‘எதிரியையும் மன்னித்தருள வேண்டும்’ என்னும் அண்ணல் மகாத்மாவின் அருளுரையினையும் கருத்திற் கொண்டு நாம் செயற்பட வேண்டும்.
“புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்” என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் முழக்கத்திற்கேற்ப இந்த உலகின் போக்கினை நாம் மாற்றிட வேண்டும். மனிதப் பண்புகளை மதித்து வாழும் நிலையினை உருவாக்கிட வேண்டும்.
மனிதன் மனிதனாக, மானுடத்தன்மையின் பிரதிபலிப்பாக என்று மாற்றம் பெறுகிறானோ அன்று தான் இவ்வுலகில் சாந்தி நிலைபெறும். அத்தகைய சூழ்நிலையினை உருவாக்கிட உலக மக்கள் அனைவரும் உண்மையுணர்ந்து உழைத்திட முன்வரவேண்டும்.