சாரணர் இயக்கம்
பிறர் நலன் கருதிப் பணியாற்றும் சமூக சேவை இயக்கங்களில் சாரணர் இயக்கம் தலை சிறந்தது. பிறருக்கு உதவி செய்தல், எல்லா உயிர்களிடத்தும் அன்பாயிருத்தல், பெரியோருக்குக் கீழ்ப்படிதல் ஆதியாம். நற்பண்புகளை வளர்ப்பதற்கு இவ்வியக்கம் பெரிதும் உதவுகிறது.
எப்பொழுதும் உதவி செய்ய ஆயத்தமாயிரு’ என்னும் இலட்சியத்துடன் செயற்படும் இவ்வியக்கம் இன்று உலக நாடுகள் பலவற்றிலும் சிறப்புறச் சேவையாற்றுகிறது.
சேர் றொபேட் பேடன் பவுல் என்னும் ஆங்கிலேயரால் ஆரம்பிக்கப்பட்ட இவ் இயக்கமானது சாதி, மத, இன பேதமின்றி மக்களுக்குத் தொண்டாற்றுகிறது.
சாரணர்கள் உண்மை பேசுபவர்களாகவும் கீழ்ப்படிவுள்ளவர்களாகவும் பிற உயிர்களிடத்து அன்புடையவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
சாரணர்கள் மூன்று அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
ஆறு வயது முதல் பதினொரு வயதுவரை உள்ளவர்கள் முதலாவது அணியிலும், பதினொரு வயதுக்கு மேல் பதினெட்டு வயதுவரை உள்ளவர்கள் இரண்டாவது அணியிலும், பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோர் மூன்றாவது அணியிலும் இருப்பர்.
சாரணர் தமக்குரிய சீருடையினை அணிந்து சின்னங்களைச் சூடியிருப்பர். அவர்கள் பிறருக்கு வணக்கம் செய்யும்பொழுது தங்கள் இடது கையில் பெருவிரலையும் சிறு விரலையும் மடக்கிக் கொண்டு ஏனைய மூன்று விரல்களாலும் வணக்கம் செய்வார்கள்.
சாரணன் ஒருவன் மற்றொரு சாரணனைச் சந்திக்கும் பொழுது இடக்கையால் கைகுலுக்கி மரியாதை செலுத்துவான்.
சாரணர் இயக்கத்தில் சாரணர் ஒருவர் சேர்ந்து கொள்ளும் போது மூன்று உறுதிமொழிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
“நான் கடவுளுக்கும் எனது தாய்நாட்டிற்கும் என்னால் இயன்ற கடமையைச் செய்வேன் என்றும், எப்பொழுதும் பிறருக்கு உதவி செய்ய ஆயத்தமாயிருப்பேன் என்றும், சாரணர் இயக்கத்திற்குரிய சட்டங்களுக்கு அடங்கி நடப்பேன்.” என்றும் அவர்கள் உறுதிமொழி பகருதல் வேண்டும்.
இவ்வுறுதி மொழிகளை என்றும் நினைவூட்டும் வகையிலே சாரணர்கள் தமது வணக்கத்தை மூன்று விரல்களாலும் செலுத்துகின்றனர்.
மக்கள் பெருந்திரளாகக் கூடும் வைபவங்களிலும் ஆலய உற்சவங்களிலும், மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் சாரணர்கள் சேவையாற்றுவதை நாம் காண்கிறோம்.
பிறர் நலன் பேணுதல், ஆபத்துக் காலத்தில் உதவி அளித்தல் ஆகியன சாரணர்களின் தலையாய இலட்சியங்களாகும். இவர்கள் முதலுதவி அளித்தல், நீந்துதல், போன்றவற்றில் தேர்ச்சியுடையவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
நமது நாட்டில் உள்ள பாடசாலைகள் பலவற்றில் சாரணர் இயக்கம் சிறந்த முறையிற் செயற்படுகிறது. பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இவ்வியக்கத்தில் சேர்ந்துள்ளனர்.
உலக நாடுகள் பலவற்றில் நிகழ்ந்த சாரணர் விழாக்களில் நமது நாட்டுச் சாரணர்கள் பங்குகொண்டு தமக்கும் நாட்டுக்கும் பெருமை தேடியுள்ளனர். நற்பிரசைகளை உருவாக்கும் சாரணர் இயக்கத்திற் சேர்வதன் மூலம் நாம் பிறருக்கு உதவி செய்பவர்களாக , நல்லவர்களாக, வல்லவர்களாக வாழ முடியும்.