தகரத்தில் அடைக்கப்பட்ட டின் உணவுகள் கண்டுபிடிக்கப்பட்ட சுவாரஸ்யமான கதை!!
இத்தாலி நாட்டின் யுத்தகளம்தான் தகர உணவுகளின் பிறப்பிடம். 1796 இல் பிரெஞ்சு நாட்டின் மாமன்னராகத் திகழ்ந்தவர்தான் மாவீரர் நெப்போலியன் பெனாபாட். அவர் தனது பிரான்ஸ் நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்தும் நோக்கில் 35,000 போர் வீரர்களை பிரான்சிலிருந்து இத்தாலிக்கு அனுப்பினார். அங்கு சென்ற பிரான்ஸ் நாட்டு வீரர்களுகுக்கு எதிரி நாட்டு வீரர்களுடன் மட்டும் அல்ல. கடும் பசியுடனும் யுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
படைவீரர்கள் உணவுக்கு பஞ்சமில்லாமல் நன்கு உண்டு நலமாக இருந்தால்தான் போரில் வெற்றி பெறமுடியும் என்பதை உணர்ந்த நெப்போலியன் உணர்ந்த நெப்போலியன், படைகள் பிரான்சுக்குத் திரும்பியதும் ஓர் அறிவிப்பை விடுத்தார்.
நீண்ட பயணத்தின்போது உணவு கெட்டுப்போகாமல் பாதுகாப்பாக வைத்திருக்கும் வழிமுறையைக் கண்டுபிடிப்பவர்களுக்குப் பெரிய பரிசுத்தொகை ஒன்றை வழங்குவதாக அவர் அறிவித்தார்.
ஏனெனில் யுத்தத்தின்போது உணவு கெட்டுப் போவது படைவீரர்களுக்குப் பாரிய பிரச்சினையாகவே இருந்தது. அத்துடன் உணவு கெடாமல் எவ்வாறு பாதுகாப்பது? என்பது குறித்து இதற்கு முன்பே உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் நிக்கலஸ் அப்பெர்ட் என்ற வர்த்தகர் ஆராய்ந்து கொண்டிருந்தார்.
காற்றுப்புகாத உணவுகள், பழுதடையாமல் அதிக காலம் இருக்கும் என்பதை அவர் கண்டறிந்தார். அதனால் காற்று எளிதில் புக முடியாத கண்ணாடிப் பாத்திரங்களை வடிவமைத்தார்.
அதில் உணவை அடைத்து வைத்துப் பரிசோதனை செய்தார். மாதக்கணக்கில் உணவு கெட்டுப்போகாமல் இருந்தது.
இக்கண்டுபிடிப்பின் மூலம் நெப்போலியனின் மாபெரும் பரிசு அவருக்குக் கிடைத்தது. ஆனால் அந்தக் கண்ணாடிப் பாத்திரங்கள் அதிக கனமுள்ளதாகவும் அதிக செலவை ஏற்படுத்துவதாகவும் இருந்தன.
இதன்பின்னர் ப்ரையன் டான்கின் என்ற ஆங்கிலேயர் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டார். கண்ணாடிப் பாத்திரங்களுக்குப் பதில் டின்னைப் பயன்படுத்தினர்.
அந்தவகையில் மெல்லிய தகரத்தைச் சுருட்டி இரு முனைகளையும் ஒட்டினார். மேல்-கீழ்ப் பக்கங்களில் மெல்லிய தகடுகளினால் மூடினார்.
1812ல் காய்கறிகள் சமைத்த உணவுகளை டின்களில் அடைத்து விற்கத்தொடங்கினார். தகரத்தில் அடைக்கப்பட்ட உணவுகள் விற்பனைக்கு வருவதற்கு முன்னர் உயிருள்ள விலங்குகளையே கப்பலில் ஏற்றிச்சென்றனர். அவை உணவுக்காகப் பயன்படும்வரை அந்த விலங்குகளுக்கு உணவு கொடுத்து பராமரித்தனர்.
எனினும் தற்போது இந்தக் கண்டுபிடிப்பு அனைவருக்கும் பெருமளவு நன்மைகளையே வழங்கி வருகிறது.