Uncategorized

திருடனுக்கு சிறுவனின் பாடம்!

ஓர் ஊரில் ஏமாற்றுப் பேர்வழி ஒருவன் இருந்தான். அவன் பெயர் சாருகன். அவன் தன் கண்களில் தென்படும் சிறுசிறு பொருட்களை எல்லாம் திருடிவிடுவான். ஒருநாள், தெரு வழியாக அவன் நடந்து சென்று கொண்டிருந்தான். அது பிற்பகல் நேரமாகையால் தெருவில் எவ்வித மக்கள் நடமாட்டமும் இல்லை. அப்போது தெருவின் ஓரத்தில் ஒரு தையற்கடை இருப்பதைப் பார்த்தான்.

“கடையில் யாருப்பா?” என்று குரல் கொடுத்தான். கடையில் பொத்தான் தைத்து கொண்டிருந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் நிமிர்ந்து பார்த்து, “என்ன வேண்டும்?” என்று கேட்டான்.

“முதலாளி இல்லையா?”

“இல்லை ! சாப்பிடப் போயிருக்கிறார்”

“பொக்கட்டில் பணம் இருக்கிறதா?”

“ஏன்?

“ஒரு கோழி வைத்திருக்கிறேன். அருமையான கொழுத்த கோழி, பிரியாணி செய்து சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும். வாங்கிக்கொள்கிறாயா?”

சிறுவன் யோசித்தான். பிரியாணி சாப்பிட்டு நீண்ட நாள் ஆகிவிட்டது. இந்தக் கோழியை வாங்கி அம்மாவிடம் கொடுத்தால், பிரியாணி செய்து தருவார். ஆசை தீர ஒரு பிடி பிடித்துவிடலாம். கோழியை ஏதோ அவசரத் தேவைக்காகத்தான் விற்க வந்திருக்கிறான் போல் இருக்கிறது. குறைந்த விலைக்குக் கொடுத்துவிடுவான் என நினைத்த சிறுவன், “கோழி என்ன விலை?” என்று கேட்டான்.

“ஐம்பது ரூபா” என்றான் சாருகன்.

“எங்கே கோழியைக் காட்டு”

“நீ முதலில் பணத்தை எடு”

“அதெல்லாம் முடியாது. முதலில் கோழியைக் காட்டு”

பையன் சிறுவனாக இருக்கிறான். அவனை ஏமாற்றி, கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு போய் விடலாம் என்று நினைத்துத் தான், கோழி என ரீல் விட்டான் சாருகன். ஆனால், சிறுவன் அவன் நினைத்த அளவுக்கு ஏமாளியாக இருக்கவில்லை.

“இதோ பார் பையா! இந்தக் கையில் பணத்தை வை உனது கையில் கோழி இருக்கும்”

” என் கையில் நீ கோழியை வைக்கும் அதேநேரத்தில், உன் கையில் நான் ரூபாவை வைக்கிறேன்”

அசந்து போனான் சாருகன். பையன் இவ்வளவு கில்லாடியாக இருப்பான் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. ஒரு வினாடி யோசித்தான்.

“சரி! உன் வழிக்கு நான் வருகிறேன். உனக்குக் கோழிதானே வேண்டும். தருகிறேன் அது எப்படியிருந்தாலும் கேள்வி கேட்காமல் வாங்கிக்கொள்ள வேண்டும்”

“சரி”

கீழே கிடந்த ஒரு துண்டுத்தாளை எடுத்து கோழி போல் ஒரு படத்தை வரைந்தான் சாருகன். “இந்தா கோழி… பணத்தை எடு!” என்று பையனிடம் கொடுத்தான்.

“கோழி படம் கோழியாகிவிடுமா?”

“சொன்ன சொல் மாறக்கூடாது. எப்படியிருந்தாலும் கோழியை வாங்கிக்கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறாய்” என்று மிரட்டினான் சாருகன்.

சிறுவன் சற்று யோசித்தான். பின்னர் அருகில் கிடந்த ஒரு துண்டுத்தாளை எடுத்து, ஐம்பது ரூபா என்று அதில் எழுதினான். “இந்தா ரூபா” என்று சாருகனிடம் நீட்டினான். !

அதைக் கண்ட சாருகனின் முகம் தொங்கிப் போய்விட்டது.

“ஏனப்பா! எருமை மாடு மாதிரி இருக்கே? இப்படி ஒரு பிழைப்பா? ஏதாவது வேலை வெட்டி பார்த்துப் பிழைக்கிறது. உன் வயசில் எனக்குப் பாதிதான் இருக்கும். நான் உழைச்சுப் பிழைக்க வில்லையா?” என்று கேட்டான் சிறுவன்.

அவமானத்தால் முகம் சுண்டிக் கறுக்கது. அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டான் சாருகன். ஒரு சிறுவனே இப்படி ஒரு கேள்வி கேட்ட பின்னர் திருடி பிழைப்பது கேவலமாகப்பட்டதால், இனி உழைத்து வாழ்வது என்று முடிவு செய்தான் சாருகன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.