தேம்பாவணி G.C.E A/L Guide
க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான தேம்பாவணி- காட்சிப்படலம்”
தேம்பாவணி என்னும் நூல் இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையான புனித யோசேப்பு மீது இயற்றப்பட்ட முதற் பெரும் செய்யுள் வகை நூலாகும். இந்நூல் இத்தாலிய நாட்டவரான வீரமாமுனிவர் அவர்கள் தமிழில் திறம்பட ஆக்கிய நூல் எனப் புகழப்படுகிறது. கிறிஸ்தவ சமயத்தின் சுருக்கமென்றே இந்நூலை அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர்.
இத்தமிழ்க் காப்பியம் பிறமொழி நூல் ஒன்றில் வருகின்ற செய்திகளைத் தழுவி, தமி்ழ் நெறிக்கேற்ப எழுதப்பட்டதாகும். அதாவது, ஸ்பானிய நாட்டு ஆகிருத நகரில் வாழ்ந்த ஆகிர்த மரியாள் (Maríyal de Ágreda) என்னும் கன்னி மறைபொருளான இறைநகரம் (Mystical City of God) என்னும் நூலை, கன்னி மரியாவின் ஆணைப்படி எழுதியதாகக் கூறியுள்ளார். அந்த நூலில் இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப்பு பற்றிய செய்திகளும் உண்டு. ஆகிர்த மரியின் அந்நூலைத் தழுவி, தமிழ் மரபுக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் ஏற்ப யோசேப்பின் வரலாற்றை இயற்றியிருக்கிறார் வீரமாமுனிவர்.
தேம்பாவணியின் பொருள்
தேம்பா + அணி எனப் பிரித்து வாடாத மாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்துத் தேன் போன்ற இனிய பாடல்களின் மாலை என்றும் இதற்குப் பொருள் உண்டு. இயேசு நாதரை வளர்த்த தந்தையாகிய சூசையப்பரைத் தலைவராகக் கொண்டு இது பாடப்பட்டது. சூசையப்பருக்குத் தேம்பாவணி எனப் பெயரிட்டு இந்நூலில் பாடியுள்ளார்.
தேம்பாவணியின் அரங்கேற்றம்
‘தேம்பாவணி’ கி.பி. 1726 ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பலத்த எதிர்புகளுக்கிடையில் அரங்கேற்றப்பட்டது. பல புலவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்குச் சளைக்காமல் பதிலளித்த வீரமாமுனிவரிடம் தமிழ்ப் புலவர்கள், “எல்லாம் தெரியுமெனக் கூறும்; பெஸ்கி அவர்களே! வானத்தில் எத்தனை நட்சத்திரம் இருக்கிறது; எனக் கூற முடியுமா?” என நையாண்டியாகக் கேட்டார்கள். பதட்டமின்றி “முப்பது மூன்று கோடி, முப்பதிமூன்று லட்டத்து, முப்பதிமூவாயிரத்து, முன்னூற்றிமுப்பதிமூன்று நட்சத்திரங்கள் சந்தேகமிருந்தால் எண்ணிப்பாருங்கள்” என்றதும், சபையில் சிரிப்பொலி எழும்பிப் பலர் முனிவரைப் பாராட்டினார்கள்.
“தேம்பாவணி”யின் சிறப்பைப் பாராட்டி மதுரைத் தமிழ்ச்சங்கம்; பெஸ்கிப் பாதிரியாருக்கு ராஜரிஷி என்ற பட்டம் அளித்து சிறப்பித்தது.
நூலின் அமைப்பு
தேம்பாவணி மூன்று காண்டங்களைக் கொண்டது. ஒவ்வொன்றிலும் 12 படலமாக 36 படலங்கள் உள்ளன. மொத்தம் 3,615 விருத்தப் பாக்கள் 90 சந்த வகைகளுடன் பாடப் பெற்றது தேம்பாவணி.