நான் விரும்பும் நூல்
நான் விரும்பும் நூல் திருக்குறள் என்னும் திருநூலாகும். இந்நூல் வள்ளுவப் பெருந்தகையால் இயற்றப்பட்டது.
இது முப்பெரும் பிரிவுகளையுடையது. அவையாவன அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்பவையாகும்.
ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள் வெண்பாக்களை நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களாக வகுத்திருக்கின்றார்.
ஒவ்வொரு குறள் முத்துக்களும் சொற் செறிவும், பொருட் சுருக்கமும் கொண்டனவாய், கேட்கக் கேட்க இன்பம் பயப்பனவாய் விளங்குகின்றன.
இந்நூலின் அருமை பெருமையை உணர்ந்த மக்கள் இதனை ஒரு தெய்வ நூலாக மதிக்கின்றனர். வள்ளுவனது திருக்குறளால் தமிழ்நாடு சிறப்படைந்தது. இதனைப் பாரதியார் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று கூறுகின்றார்.
திருக்குறள் மக்களுக்கு உலக நீதியை எடுத்தியம்புகிறது. ஒவ்வொரு செய்யுளும் ஆழ்ந்த கருத்தைத் தன்னகத்தே உடையதாக அமைந்துள்ளது.
படிக்கப்படிக்க வெறுப்பின்றி மக்கள் மனதில் பதிந்து அவர்களை நல்வழிப்படுத்தும் பெருமையுடையதாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு செய்யுளும் எண்ணற்ற உண்மைகளை எடுத்துக் காட்டுகிறது. திருவள்ளுவரின் திறமையை உலகுக்கு எடுத்துக் காட்டும் உன்னதக் கருத்தோவியமாகிறது.
கடவுள் வாழ்த்து, மக்கள் தாம் செய்யும் எக்கருமத்தையும் திறம்பட நடாத்த வேண்டும் என்னும் எண்ணத்தோடு அமைந்துள்ளது. அதன்படியே வள்ளுவரும் திருக்குறளில் கடவுள் வாழ்த்தை முதலாவதாக அமைத்துள்ளார்.
அதிலிருந்து ஒவ்வொரு அதிகாரமும் மனிதனை அறிவுள்ளவனாகவும் சிறந்தவனாகவும் ஆக்குவிக்க வேண்டும் என்னும் எண்ணத்தோடு தொடர்புற அமைக்கப்பட்டுள்ளது.
திருமால் இரு அடிகளால் உலகளந்தார். திருவள்ளுவரோ திருக்குறளை ஒன்றே முக்கால் அடிகளால் ஆக்கி உலகளந்த பெருமைக்குள்ளாகின்றார்.
கடுகு சிறிது காரம் பெரிது என்றாற் போன்று திருக்குறளும் சிறிய செய்யுள் வடிவில் இருப்பினும் அதன் கருத்துக்களோ சிறந்தனவாகின்றன.
“கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக”
என்னும் வள்ளுவன் வாக்கிற்கமைய நாம் பிழையின்றிக் கற்க வேண்டும். நாம் கற்பதோடு மட்டும் நில்லாது அவற்றின் படி ஒழுகவும் பழகிக் கொள்ள வேண்டும்.
அவ்வாறின்றி பொழுதுபோக்காகத் திருக்குறளைக் கற்போமாயின் யாது பயனையும் அடைய மாட்டோம். திறம்படத் திருக்குறளைக் கற்போமாயின் சிறந்த அறிவாளியாக விளங்குவோம். உலக மக்களும் எம்மைப் போற்றுவர்.
திருக்குறளின் ஒப்பற்ற பெருமையினை, அருமையினை நன்குணர்ந்தே நான் இந்நூலை விரும்புகிறேன். தினந்தோறும் படிக்கிறேன்..
“கற்றாங்கு ஒழுகு” என்பதற்கமையத் திருக்குறளைக் கற்று அதன் வழி ஒழுக மாணவர்களாகிய நாம் பழகிக் கொள்ளுதல் வேண்டும்.