கட்டுரைகள்

நான் விரும்பும் ஈழத்துப் பெரியார் ஒருவர்..!

ஈழநாடு காலத்துக்குக் காலம் பல பெரியார்களைத் தந்துள்ளது. இலக்கியம், கல்வி, அரசியல், விஞ்ஞானம், சட்டம், வைத்தியம் ஆதியாம் பல்வேறு துறைகளில் புகழ் நிறுவிய பெரியார்கள் பலர் உளர். அத்தகையோரில் அரசியல், கல்வி, சமூகசேவை அனைத்துத் துறைகளிலும் ஒப்பற்ற சேவையாற்றித் தம் புகழ் நிறுவிய பெரியார்களில் சேர். பொன். அருணாசலம் குறிப்பிடத்தக்கவர்.

இவர் யாழ். மாவட்டத்தில் உள்ள மானிப்பாயில் புகழ் பூத்த குடும்பம் ஒன்றில் 1853 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் பதினான்காம் நாள் பிறந்தார். பெரும் புகழ் பெற்று விளங்கிய பொன். குமாரசாமிக்கும். சேர். பொன். இராமநாதனுக்கும் இவர் தம்பியாவார். தமிழிற் சிறந்த புலமை பெற்ற இவர் ஆங்கிலம், கிரேக்கம், இலத்தீன், ஆரியம் ஆகிய மொழிகளிலும் சிறந்த பயிற்சி உடையவர். தமது இளமைக் கல்வியைக் கொழும்பு றோயல் கல்லூரியிற் பெற்றார். பின்னர் கேம்பிறிச் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்றுப் பட்டதாரியானார். சிவில் சேவைப் பரீட்சையில் முதன் முதலாகச் சித்தியெய்திய இலங்கையரும் இவரே.

இவர் இலங்கை அரசின் கீழ் நீதிமன்ற அலுவலர் பதவி தொட்டு நீதிபதி பதவி வரை பல பதவிகளை வகித்தார். இலங்கை குடிசன மதிப்பீடு தொடர்பாக இவர் வெளியிட்ட இலங்கைக் குடிசன சூசிகை , இவரது ஆற்றல்களை நன்கு வெளிக்காட்டின. ஆங்கிலேய அரசு இவரது திறமையை வியந்து “நைட்” என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது.

அந்நிய ஆதிக்கத்தின் கீழிருந்து இலங்கை விடுதலை பெற வேண்டும் என்னும் விடுதலை உணர்ச்சி கொண்டவர் சேர். பொன். அருணாசலம் இதன் காரணமாக இவர் தமது அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றதும் அடிமைத்தளையை அறுத்தெறியும் பணிகளில் ஈடுபட்டார். தமது அனுபவம் ஆற்றல்கள் அனைத்தையும் பயன்படுத்தி இலங்கை மக்கள் தம் நல்வாழ்வுக்காக அயராதுழைத்தார். பல்வேறு அரசியல் சீர்திருத்தங்களை நாடி நின்றார். இலங்கை சீர்திருத்தச் சங்கம். இலங்கை சமூகசேவைச் சங்கம் முதலிய பல்வேறு சங்கங்களுக்கு ஊடாக இவர் ஆற்றிய பணிகள் பல.

அரசியல், சமூகப்பணிகளோடு மட்டும் நின்றுவிடாது இவர் இலங்கை மக்களின் கல்வி வளர்சிக்காகவும் பாடுபட்டார். இலங்கையில் தாய் மொழிக் கல்விப் போதனைக்கு வித்திட்டவர்களில் இவரும் ஒருவர். இலங்கைக்குப் பூரணத்துவம் வாய்ந்த ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுத்தவரும் இவரே. இலங்கைப் பல்கலைக் கழகம் இவரது உழைப்பின் பேறாகவே உருவாகியது.

சைவசமயத்திற்கும், தமிழ்மொழிக்கும் அரும்பணியாற்றி யுள்ளார். சிறந்த சைவ சமயியாகவே அவர் இறுதிவரை வாழ்ந்தார். அன்னார் 1924 ஆம் ஆண்டு தை மாதம் ஒன்பதாம் திகதி இறைவன் திருவடிகளையடைந்தார். இவரது சிந்தனைத் தெளிவும் சிறந்த பண்பும் விடாமுயற்சியும் இந் நாட்டு மக்களுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகும். அன்னாரது நினைவாக கொழும்பு மாநகரின் பழைய பாராளுமன்றக் கட்டட முன்றலில் அவரது உருவச்சிலை இன்றும் கம்பீரமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.