நோபல் பரிசு
நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இப்பரிசு பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டதும் அவர்கள் புகழேணியின் உச்சியை அடையும் அளவுக்கு அவர்களைப் பற்றிய செய்திகள் வெளியாகின்றன.
உலகத்தில் உள்ள எல்லாச் செய்தித்தாள்களிலும், சஞ்சிகைகளிலும் அவர்களைப் பற்றிய விபரங்கள் பெரிய அளவில் பிரசுரமாகின்றன.
வானொலியும், தொலைக்காட்சியும் அவர்கள் புகழ் பாடுகின்றன. அந்த அளவுக்குப் பரபரப்பூட்டும் நோபல் பரிசை வழங்குதற்கு வழிவகுத்தவர் ஒரு விஞ்ஞான மேதையாவார்.
அவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்தவராவார். அவரது முழுப்பெயர் ஆல்பிரட்பெர்ன் ஹெர்ட் நோபல் என்பதாகும்.
உலகப் புகழ் பெற்ற இப் பெரியார் 1833 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் திகதி பிறந்தார். சோவியத் நாட்டில் உயர் கல்வி பயின்றார். விஞ்ஞானத் துறையில் மிக்க ஆர்வம் காட்டினார்.
புதியன கண்டு பிடிப்பதில் இவரது கவனம் சென்றது. இதன் பயனாக வெடிமருந்தைக் கண்டுபிடித்தார்.
இம்மகத்தான கண்டுபிடிப்பானது பாறையைப் பிளக்கவும், பெற்றோல் கிணறுகளைத் தோண்டவும் பயன்படுகிறது. போரில் பயங்கர அழிவையும் ஏற்படுத்துகிறது.
நோபலின் பெரும் செல்வத்துக்கும் புகழுக்கும் காரணம் அவர் கண்டுபிடித்த வெடிமருந்தேயாகும். இதனால் இவரது புகழ் உலகெங்கும் பரவியது. பெரும் செல்வம் குவிந்தது.
இவர் இறக்கும்போது விட்டுச் சென்ற பணம் 9,20,000 டொலர்களாகும். இவ்வளவு செல்வத்தையும் நல்ல முறையில் பயன்படுத்த அருமையான உயில் ஒன்றையும் அவர் எழுதி வைத்தார்.
இதிலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு ஐந்து பரிசுகள் ஏற்படுத்தினார். பெளதிகம், இரசாயனம், மருத்துவம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் சீரிய பணியாற்று பவர்களுக்கு இத்தொகை கிடைக்க வழி செய்தார். இப்பரிசுகள் அவரது பெயராலேயே வழங்கப்படுகிறது.
சுவீடனில் உள்ள நோபல் பவுண்டேசன் என்னும் நிறுவனத்தால் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு துறைக்குமான பரிசுகளை வெவ்வேறு நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கின்றன.
நோபல் பரிசு பெறுவோருக்குத் தங்கப்பதக்கமும், சான்றிதழும், பெருந்தொகைப் பணமும் அளிக்கப்படுகின்றன.
நோபல் பரிசு பெற்ற பேரறிஞர்கள் பலர் இவர்களுள் அணுசக்தியைக் கண்டறிந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஜன்ஸ்டைன், பிரபல நாடகாசிரியர் ஜோர்ஜ் பெர்னாட் ஷா மகாகவி இரவீந்திரநாததாகூர், பிரபல இந்திய விஞ்ஞானி சேர்.சி.வி. இராமன், அன்னை தெரேசா , அமர்த்தியா சென்; ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் நாயகம் கோபி அனான் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
நோபல் பரிசுடன் நோபலின் பெயரும் உலகெங்கும் பரவியுள்ளது.