பண்டிதர்.மு.நல்லதம்பியின் பாரதியார்
க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான பண்டிதர்.மு.நல்லதம்பியின் “பாரதியார்”
முதுதமிழ்ப் புலவர், பண்டிதர் மு. நல்லதம்பி பண்டிதர் மு. நல்லதம்பி அவர்கள், ஈழத்துத் தமிழ்ப் புலவர்களிலே தனக்கென்று தனியான ஓரிடத்தைப் பிடித்துக் கொண்டவர். 55 ஆண்டுகள் மட்டும் இம் மண்ணில் வாழ்ந்து புகழ் பெற்றவர். வட்டுக்கோட்டையின் சிவன் கோவிலடிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது பெற்றோர் முருகப்பிள்ளை – தங்கம்மை, ஆகியோர். இளமையில் கவிபாடும் ஆற்றல், நாடகம் நடிக்கும் ஈடுபாடு இவரிடம் காணப்பட்டன. இவர் பயிற்றப்பட்ட தமிழாசிரியராகத் தமது கல்விப் பணியைத் தொடங்கினார். ஆசிரிய சேவையில் கொழும்பு ஸாகிராக் கல்லூரியில் இருந்த காலம் உன்னதமானது. இக் கல்லூரியின்
தலைமைத் தமிழ்ப் பண்டிதராக விளங்கியவர். யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கப் பரீட்சகராயும், இலங்கை வித்தியா பகுதிப் பாடநூல் பிரசுரசபை அங்கத்தவராகவும் பணி புரிந்தவர். கொழும்புலுள்ள இலங்கைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவும், 1940களில் சில ஆண்டுகள் பணியாற்றியவர்.
பண்டிதர் மு. நல்லதம்பி அவர்களின் கவியாற்றலும் தமிழ்ப் பணியும் பாராட்டித் தமிழ்நாடு திருநெல்வேலி தமிழ்ச் சங்கத்தார் 1940 ஆம் ஆண்டு “முத் தமிழ்ப் புலவர்” எனும் பட்டமளித்து கௌரவித்தனர். தமிழ் நாட்டுடனும் அவருக்கு அதிக தொடர்பு காணப்பட்டது. இலங்கையின் “ஈழகேசரி” மற்றும் தமிழகப் பத்திரிகைகளில் இலக்கண, இலக்கியக் கட்டுரைகள் எழுதியுள்ளார். பாட நூல்கள், சிறுவர் பாடத்தொகுதிகள் போன்றவற்றையும் எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றுள் ஈழ வாசகம், மொழிப் பயிற்சி, இளைஞர் விருந்து ஆகியவை குறிப்பிடத்தக்கன. இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் 1948 ல் ஆனந்த சமரக்கோன் அவர்களால் சிங்கள மொழியில் இயற்றப்பட்ட தேசிய கீதத்தினைத் தமிழில் உயிர்ப்புடையதாக 1950 ஆம் ஆண்டு மொழி பெயர்த்தவர் இவரே. “நமோ நமோ தாயே! நம் ஸ்ரீ லங்கா” எனத் தொடங்குவதே அந்தக் கீதமாகும். இலங்கையின் சுதந்திரத்தை முன்னிட்டு நடைபெற்ற மரதன் அஞ்சல் ஓட்டப் போட்டிக்குத் தேசிய ரீதியில் கவிதைப்
போட்டியில் பண்டிதர் அவர்கள் கலந்து கொண்டு, “மணித் திருநாடும் மரதன் ஓட்டமும்” என்ற கவிதைக்காக முதல் பரிசைப் பெற்றுக் கொண்டார்.
Complete Guide PDF