சங்கப்பாடல் – G.C.E A/L Guide
உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக விளங்குகின்ற மொழி தமிழ் மொழியாகும். ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’ என்று புறப்பொருள் வெண்பா மாலை என்ற புற இலக்கண நூல் கூறுவதைக் கொண்டு தமிழின் பழமையை உணரலாம். தொடக்க காலத்தில் தமிழ் எந்தப் பகுதியில் பேசப்பட்டது என்பதைத் தொல்காப்பியம் என்ற பழம்பெரும் இலக்கணநூல் கூறுகிறது. தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதிய பனம்பாரனார் என்பவர்
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறும் நல்லுலகம்
என்று தமிழ்நாட்டின் எல்லையைக் கூறுகின்றார். எனவே, வடக்கே வேங்கடமலை முதல் தெற்கே குமரிமுனை வரை தமிழ் பேசப்பட்டதாக நாம் இதன் மூலம் அறிகிறோம். தமிழ்நாட்டைச் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களும், பல குறுநில மன்னர்களும் ஆண்டதாகச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. சேர நாட்டிற்கு வஞ்சி மாநகரும், சோழ நாட்டிற்குப் பூம்புகாரும், பாண்டிய நாட்டிற்கு மதுரையும் தலைநகர்களாக இருந்துள்ளன. மூவேந்தர்களில் பாண்டிய மன்னர்கள் தமிழ்மொழியைப் போற்றி வளர்க்கும் வண்ணம் தமிழ்ச் சங்கங்கள் வைத்து நடத்தியதாகப் பல்வேறு சான்றுகள் கிடைக்கின்றன.
அச்சங்கங்களில் தமிழ்ப் புலவர்கள் இருந்து தமிழ் ஆய்வு செய்ததாகவும், தமிழில் பல்வேறு செய்யுள்களை இயற்றியதாகவும் சங்க இலக்கியங்கள், இறையனார் களவியல் உரை போன்ற நூல்களால் அறியலாம். தமிழ் என்ற சொல் இனிமை என்ற பொருளை உடையது. இனிமையும், நீர்மையும் தமிழ் எனலாகும்’ என்று பிங்கல நிகண்டு கூறுகின்றது. மதுரமான மொழி என வால்மீகி இராமாயணம் கூறுகின்றது. இந்த இனிமையான தமிழ் மொழியைச் சங்கம் மூலம் புலவர்களும் கற்றறிந்தோரும் சிற்றரசர்களும், பேரரசர்களும் பல்வேறு வகைப்பட்ட செய்யுட்களைப் பாடி வளர்த்தனர். புலவர்கள் அரசர்களால் பெரிதும் போற்றப்பட்டனர்.
சங்க இலக்கியங்கள்
சங்கம் என்ற ஓர் அமைப்பு இருந்ததாகப் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்தாலும், சங்கத்திலே அமர்ந்து புலவர்கள் பாடிய பாடல்கள் சிலவாகத் தான் இருக்க முடியும். பெரும்பாலான பாடல்கள், பல்வேறு இடங்களில், பல்வேறு காலங்களில், பல்வேறு புலவர்களால் பாடப்பட்டவையாகத்தான் இருக்க வேண்டும். அவை கி.மு.500 முதல் கி.பி.200 முடிய உள்ள காலத்தில் பாடப்பட்டவையாக இருக்கலாம். சங்கப் பாடல்கள் எட்டுத்தொகை நூல்கள் என்றும், பத்துப்பாட்டு என்றும் பிரிக்கப்பட்டிருத்தல் காணத்தக்கது. ஏராளமான பாடல்கள் ஓலைச் சுவடிகளில் இருந்து அழிந்துபோக, எஞ்சியவற்றைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அக்காலத்து அரசர்கள் புலவர்களின் துணையோடு செயல்பட்டனர்.
அவ்வாறு தொகுக்கப்பட்டவையே எட்டுத்தொகையும், பத்துப்பாட்டுமாகும். இக்காலப்பகுதியில் படைக்கப்பட்ட இலக்கண நூல்களுள் தொல்காப்பியம் மட்டுமே கிடைத்துள்ளது. எட்டுத் தொகுதிகளாகத் தொகுக்கப்பட்ட எட்டு நூல்கள் எட்டுத்தொகை என்றும், பத்துப் பெரிய பாடல்கள் பத்துப் பாட்டு என்றும் பெயர் பெற்றன.
Complete Guide – PDF