செஞ்சிலுவைச் சங்கம்
மனிதகுலத்தின் துன்பம் துடைக்கும் துாய பணியில் ஈடுபட்டுள்ள சமூக சேவை நிறுவனங்கள் பல உள்ளன. இவற்றுள் செஞ்சிலுவைச் சங்கம் முதலிடம் வகிக்கிறது.
‘றெட்குறொஸ்” என்று அழைக்கப்படும் இவ்வமைப்பு மதம், நிறம், நாட்டினம் என்ற வேறுபாடின்றி மனித குலத்தின் துயர் போக்கும் பணியில் துடிப்புடன் செயலாற்றுகிறது.
போர்க்காலத்திலும் அமைதிக்காலத்திலும் பணிபுரியும் இவ்வமைப்பின் கிளைகள் உலக நாடுகள் அனைத்திலும் உண்டு.
போரில் காயப்பட்ட படைவீரர்களைக் கவனித்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட இவ்வமைப்பானது இன்று உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு உதவி அளித்து
வருகிறது. அமைதிக்காலத்தில் முதலுதவி தருதல், விபத்துக்களைத் தடுத்தல், குடிநீரைப் பாதுகாத்தல், தாதிகளுக்குப் பயிற்சி அளித்தல், தாய்-சேய் நல மையங்களைப் பேணுதல், மருத்துவமனைகளை நிறுவுதல், இரத்த வங்கி அமைத்தல் ஆகிய பணிகளில் இவ் அமைப்பு ஈடுபடுகிறது.
செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவியவர் ஜீன் ஹென்றி டுனண்ட் என்பவராவார். அவர் 1859-06-20 ஆம் திகதியன்று வர்த்தக விடயமாக லாவார்டி நகருக்குச் சென்றிருந்தார்.
அக்காலத்தில் ஆஸ்திரியாவுக்கும் பிரான்சுக்குமிடையே கடும் போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. இப்போரில் லாவார்டி நகரம் பெரும் தாக்குதலுக்கு இலக்கானது. ஆயிரக்கணக்கான மக்கள் போரின் கொடுமையால் அவதியுற்றனர்.
முதலுதவி கிட்டாததல் அநேகர் மாண்டனர். நெஞ்சை நெகிழ வைக்கும் இந்த அவலக்காட்சிகள் ஹென்றியின் மனத்தைப் பெரிதும் பாதித்தன. அவர் தனது சொந்த வேலையை மறந்தார். துன்பமுற்ற மக்களின் துயர் போக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். இதனால் பலரது உயிரைப் பாதுகாத்தார்.
இப்போர் முடிவுற்றதும் ஹென்றி உலக மக்களுக்கு உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை விடுத்தார். “போரில் காயமுறும் வீரர்கள் எந்தக் குறிப்பிட்ட நாட்டையும் சேர்ந்தவர்களல்ல.
போர்க்களத்தில் நாதியற்ற இந்த வீரர்களுக்கு மனிதாபிமானத்துடன் சேவை செய்வது மனித குலத்தின் கடமையாகும்” என்று அவர் தமது வேண்டுகோளில் குறிப்பிட்டார்.
இதன் பயனாக 1864 இல் ஜெனீவாவில் அனைத்துலக மகாநாடொன்று நடைபெற்றது. அதில் 14 நாடுகள் செஞ்சிலுவை அமைப்பை நிறுவ ஒப்புதல் வழங்கின.
வெள்ளை நிற நிலைக்களனில் சிவப்புநிறச் சிலுவை பொறித்த (றெட்குறொஸ்) கொடியே செஞ்சிலுவைச் சங்கத்தின் கொடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
செஞ்சிலுவை அமைப்புக்கு மூன்று உறுப்புக்கள் உள்ளன. முதலாவது செஞ்சிலுவைச் சங்கத்தின் அனைத்துலகக் குழு . இதன் தலைைமச் செயலகம் ஜெனீவாவில் உள்ளது. இரண்டாவது செஞ்சிலுவைச் சங்கங்களின் சபை. மூன்றாவது தேசிய செஞ்சிலுவைச் சங்கங்கள்.
போர்க்காலங்களில் செஞ்சிலுவையின் அனைத்துலகக் குழு போரில் ஈடுபட்ட நாடுகளுக்கும், தேசிய செஞ்சிலுவைச் சங்கங்களுக்கும் நடுவராகச் செயலாற்றும்.
போர்க்கைதிகளின் நலனைப் பேணும். இவ்வமைப்பானது பெரும் புயல், கொள்ளை நோய், பஞ்சம் போன்றவற்றிலிருந்து மக்களைக் காத்திடப் பெரும் பணியாற்றுகிறது.