தேசிய விளையாட்டுக்களும் அவற்றின் நன்மைகளும்!
“சுவர் இருந்தாற்றான் சித்திரம் வரையமுடியும்”. “ஆரோக்கியமான மனம் ஓர் ஆரோக்கியமான உடலிற்றான் இருக்கும்” என்பன முதுமொழிகள்.
இம்முது மொழிகளுக்கேற்ப எம்மைத் தேக பலத்துடனும் மனோபலத்துடனும் வைத்திருக்க உதவுபவை விளை யாட்டுக்களே. வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்சினைகளைத் தீர்க்கவும், விளைவுகளைப் பெருந்தன்மையுடன் ஏற்கவும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை ஏற்படுத்தவும், தலைவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவும் உறுதுணை புரிபவை விளையாட்டுக்களே.
முற்காலத்திலே யானை ஏற்றம், குதிரை ஏற்றம், தேரோட்டம், விற்போர், மற்போர், வாட்போர், சிலம்பம் என்பன விளையாட்டாகவும் விளையாடப்பட்டன; போரிடவும் பயன்பட்டன. இவற்றை இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலிருந்து நாம் அறியலாம்.
இவைதவிர, வீரத்தைப் புலப்படுத்தும் “ஏறு தழுவுதல்” போன்ற விளையாட்டுக்களும் அக்காலத்திலே காணப்பட்டன. பண்டைக்காலத்திலே பெண்களைப் பெற்றோர் சிறந்த வீரர்களுக்கே அவர்களை மணஞ் செய்து கொடுக்க விரும்பியதால் இத்தகைய விளையாட்டுக்கள் பிரபல்யம் பெற்றன.
இவை தவிர கொம்பு முறித்தல், சடுகுடு , தாச்சி மறித்தல் அல்லது கிளித்தட்டு , கிட்டிப்புள், வாரோட்டம், எல்லே என்னும் விளையாட்டுக்கள் எங்கள் தேசிய விளையாட்டுக்களாக மிளிர்கின்றன.
இவை நமது நாட்டிலே தொன்று தொட்டு விளையாடப்பட்டு வந்தமையால் நாம் இவற்றைத் தேசிய விளையாட்டுக்கள் என்கிறோம். ஒரு நாட்டின் பாரம்பரியத்தையும், கலை, கலாசாரத்தையும் பிரதிபலிப்பனவே தேசிய விளையாட்டுக்கள்.
தேசிய விளையாட்டுக்கள் கிராமங்களிலே விசேடமாக இடம் பெறுகின்றன. நமது நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பிரதேசங்களில் உள்ள ஊர்களில் ஊர்முழுவதும் வடசேரி , தென்சேரி என்றோ, மேலைச்சேரி, கீழைச்சேரி என்றோ இரு சேரிகளாகப் பிரிந்து தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுதலுமுண்டு. அண்மைக்காலத்தில் துலாமிதித்தல், கிடுகுபின்னுதல் போன்ற தொழிலை அடிப்படையாகக் கொண்ட போட்டிகளும் இடம் பெறுகின்றன.
கிரிக்கெட், ஹாக்கி, உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் தனித்தனி விளையாட்டுக்கழகங்கள் உண்டு.
அதேபோன்று தேசிய விளையாட்டுக்களுக்கும் கழகங்களை உருவாக்கிச் செயற்பட வேண்டும். இதன் மூலம் நமது தேசிய விளையாட்டுக்கள் மேன்மேலும் வளர்ச்சியுறும்.
தேசிய விளையாட்டுக்களில் நாம் பங்குகொள்ளும் போது புதியதோர் உணர்வினைப் பெறுகிறோம். இவை நமக்கு உற்சாகமளிக்கும் பொழுது போக்காகவும் அமைகின்றன.
ஒழுங்கு , கட்டுப்பாடு, வெற்றி தோல்விகளைச் சமமாக மதிக்கும் மனப்பான்மை ஆதியாம் சிறந்த பண்புகளை நாம் விளையாட்டின் மூலம் பெறுகின்றோம். இவற்றை நன்குணர்ந்து மாணவர்களாகிய நாம் தேசிய விளையாட்டுக்களில் ஆர்வத்துடன் பங்கு கொள்ளுதல் வேண்டும்.
நமது தேசிய பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் தேசிய விளையாட்டுக்களின் வளர்ச்சிக்கு நம்மாலான பங்களிப்பினை வழங்குதல் வேண்டும். இதன் மூலம் நாட்டுக்குகந்த நற்பிரசைகளாக நம்மை உருவாக்கிக் கொள்ள முடியும்.
“ஓடி விளையாடு பாப்பா – நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா – ஒரு
குழந்தையை வையாதே பாப்பா”