வேதம்
வேதங்கள்
பண்டைய இந்து மதம் பற்றிய கருத்துகளை அறிந்து கொள்வதற்கு எமக்கு கிடைக்கின்ற இலக்கிய ஆதாரங்கள் வேதங்களாகும். வேதம் என்பது “வித்’’ என்ற அடியில் இருந்து பிறந்தது. வித் என்றால் அறிவு எனப் பொருள்படும். எனவே வேதம் என்பது அறிவு நூல் அல்லது ஞானநூல் எனப் பொருள்படும். வேதங்கள் என்னும் போது இருக்கு வேதம், யசுர் வேதம், சாமம் வேதம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களையுமே குறிப்பதாய் உள்ளது. இவ்வாறு வேதங்களை நான்காக வகுத்தவர் வியாச முனிவராவார். ஒவ்வொரு வேதத்திலும் சங்கிதைகள், பிரமாணங்கள், ஆரணியங்கள், உபநிடதங்கள் என நான்கு பகுதிகள் உண்டு.
வேதத்தின் சிறப்பு
பண்டைய இந்துமதம் பற்றிய கருத்துகளை அறிந்துகொள்வதற்கு எமக்கு கிடைத்த மிகபழைய இலக்கிய ஆதாரங்களாக வேதங்கள் மிளிர்கின்றன. இவ்வேதங்களுள் இருக்கு வேதமே காலத்தால் முற்பட்டது. அதர்வவேதம் காலத்தால் பிற்பட்டது எனக் கருதப்படுகின்றது. இவ்வேதங்கள் இருடிகள் எனப்படும் முனிவர்களின் கடும்பங்களிலே தலைமுறை தலைமுறையாக செவி வழி மரபிலே பேணப்பட்டு வந்தமையால் “எழுதாக் கிழவி”, “எழுதாமறை”, “சுருதி” எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது.
வேதங்கள் மனிதரால் ஆக்கபடாத காரணத்தினால் அவை “ அபௌருஷேயம்” என்ற சிறப்பு பெயரை பெறுகின்றன. வேதம் இறைவனாலே ஆக்கப்பட்டது என்பதனை “மிக்கவேதம் மெய்யூர் செர்ளவனே” என மணிவாசகர் கூறுகின்றார். மேலும் திருமந்திரத்தில் “வேதத்தை விட அறம் இல்லை” என்ற பாடல் வேதத்தின் சிறப்பை கூறுகின்றது.
வேதமே முதல் நூல் ஏனெனில் வேதம் பற்றிய பல நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் வேதத்தில் வேறு எந்த நூல் பற்றியும் கூறப்படவில்லை. மற்றும் இந்துக்களின் தத்துவசிந்தனைகளும் கோட்பாடுகளுக்கும் அடித்தளமாக விளங்குவது வேதமேயாகும்.இவ்வாறு வேதங்கள் பலவகையில் சிறப்பு பெறுகின்றன.
கடவுள் கோட்பாடு
வேதகால கடவுட்கோட்பாடு முற்பட்ட கால கடவுள் கோட்பாடு, இடைபட்ட காலகடவுட்கோட்பாடு, பிற்பட்ட கால கடவுட் கோட்பாடு என மூன்று வகையாக நோக்கப்படுகின்றது. ஆரம்ப காலத்தில் வேதகால மக்கள் இயற்கை சக்திகளை வெல்லவோ, விளங்கவோ முடியாதவர்களாக காணப்பட்டனர். இடி,மின்னல்,மழை,புயல் போன்ற இயற்கையின் ஒவ்வொரு செயலையும் தமக்கு மேற்பட்ட சக்தியாகக் கருதினர். எனவே வேதகால மனிதன் பயத்தின் அடிப்படையில் இயற்கையை கடவுளாக வழிபட முனைந்ததோடு வேதகால கடவுள் கோட்பாடும் உதயமாயிற்று.
இயற்கையை வழிபட்ட மனிதன் அவ் இயற்கை சக்திகளுக்கு இறைநிலை கொடுத்து பல்வேறு பெயர்கள் சூட்டி வழிபடத் தொடங்கினான்.இவ்வாறு இருக்கு வேதகாலத்தில் 33 தெய்வங்கள் வணங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இத் தெய்வங்களை மண்ணுறை தெய்வங்கள், விண்ணுறை தெய்வங்கள், இடைநிலை தெய்வங்கள் என ஆய்வாளர்கள் மூன்று வகையாக பிரித்து நோக்குகின்றனர். இவற்றுள் இந்திரன், வருணன், அக்கினி, உருத்திரன், விஷ்ணு முதலிய தெய்வங்கள் குறிப்பிடத்தக்கன.
இருக்கு வேதகாலத்திலே பல தெய்வங்கள் வழிபட்டமை மறுக்கமுடியாத உண்மை. இருப்பினும்ஒவ்வொரு தேவைக்கும் அவர்கள் ஒவ்வொரு தெய்வத்தை வழிபட்டமை காணமுடிகின்றது. அவ்வேளை அந்த ஒரு தெய்வமே எல்லாவற்றிலும் உயர்ந்த மேலான தெய்வமாகக் கருதப்படுகின்றது. இவ்வாறு இடைப்பட்ட வேதகாலத்தில் தேவைகேற்ப ஒரு தெய்வத்தை முதன்மைப் படுத்தி வழிபடுகின்ற ஒரு தெய்வ கோட்பாடு தோன்றியது.
இருக்கு வேதம் 10ம் மண்டலத்தில் சந்தேகத்திற்கிடமான ஒரு வினா காணப்படுகின்றது. நாம் யாருக்கு நமது அவி பாகத்தை செலுத்துவோம்? எல்லாவற்றிலும் உயர்ந்ததும் மேலானதுமான தெய்வம் எது?’’ என்று கேட்கபட்டன. அதற்கு “பிரஜாபதியே எல்லாவற்றிலும் உயர்ந்ததும் மேலானதுமான தெய்வம்.அவருக்கே உங்கள் அவிபாகத்தைக் கொடுங்கள்” என்று கூறப்படுகின்றது. இதுவும் இருக்கு வேதகால ஒரு தெய்வ கோட்பாட்டிற்கான ஒரு ஆதாரமாகும்.
இடைப்பட்ட வேதகால ஒரு தெய்வ கோட்பாட்டிலிருந்து மேற்பட்டதாக ஒரு பொருள் கோட்பாடு பிற்பட்ட வேதகாலத்தில் தோன்றியது. இருக்குவேதம் 10 மண்டலத்தில் ‘’ உள்பொருள் ஒன்று அதனை பலவென்று அழைப்பர்” எனப் பொருள்படும். “ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி’’ என்ற கூற்று காணப்படுகின்றது.மேலும் இங்கு பலவற்றிலும் வலிமை வாய்ந்தது ஒன்று என்ற கூற்றும் காணபடுகின்றது. புருஷன் ஒருவனே எல்லாவற்றிலும் இருக்குறான். இருந்தான், இருப்பான் போன்ற மகாவாக்கியங்கள், உள்பொருள் ஒன்று என்பதை விளக்குகின்றன.
இவ்வாறு உள்ள பொருளை பிற்காலத்தில் பிரமம் என்றும் பரமாத்மா என்றும் அழைக்கப்பட்டது. வேதாந்தம் ,சித்தாந்தம், உபநிடத தத்துவங்கள் தோன்றுவதற்கும் இதுவே வழிசமைத்தது.
தத்துவக் கருத்துகள்
வேதங்களின் இறுதிப்பகுதிகளாக கொள்ளபடுபவை உபநிடதங்கள் ஆகும். இந்து தத்துவஞானத்தின் தோற்றுவாயாக வேத சங்கிதைகளைக் காணமுடிகின்றது.வேதங்கள் இறைவன், ஆன்மா, உலகம், கன்மம், மறுபிறப்பு பற்றிய ஆரம்பகால மனிதனின் சிந்தனை கூறுகளைக் கூறுகின்றன.
ஆரம்பதில் இயற்கைக்கு பயந்து அவற்றை வழிபட்ட மனிதன் இறுதியில் இத்தெய்வங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு தெய்வமாகவும் , உண்மை பொருள் ஒன்றே என்றும் அக்கால மனிதன் அறிந்து கொண்டான். இருக்கு வேதம் 10ம் மண்டலத்தில் எல்லாவற்றிலும் மேலானதும் உயர்ந்ததுமான தெய்வம் பிரஜாபதியே’’ என்ற கூற்று ஒரு தெய்வக் கோட்பாடினைக் காட்டும்.
இருக்கு வேதத்தில் காணப்படும் “ஏகம் சத்விப்ரா பகுதா வதந்தி” ,”புருஷ யதம் எபதாம் சர்ப்பம் யத் பூதம் யச்ச பாவம்” (புருஷன் ஒருவனே எல்லாவற்றிலும் இருந்தான், இருக்கின்றான்,இருப்பான்) போன்ற மகாவாக்கியங்கள் உள்பொருள் ஒன்று என்பதை உணர்த்தின. இவ்வுள்ள பொருளை பிரமம் என்றும் பரமாத்மா என்றும் அழைக்கப்பட்டு வேதாந்தம் ,சித்தாந்தம் உள்ளிட்ட தத்துவங்கள் தோன்ற வழிசமைத்தது.
ஆன்மா பற்றிய கருத்தை நோக்கும்போது ஒவ்வொரு உடலிலும் ஒவ்வொரு ஆன்மா உண்டு’ என்றும். அத்தகைய ஆன்மா உண்மை என்றும்,உடல் அழியும்போது ஆன்மா அழிவதில்லை. ஒருவர் இறந்ததும் அவருடைய ஆன்மா அவர் செய்த வினைக்கேற்ப மோட்சத்திற்கோ,நரகத்திற்கோ செல்லும் என்று கூறப்படுகின்றது.யம சூக்தத்தில் “இஸ்டா பூர்த்தங்களோடு செல்வாயாக” என வருகின்றது. அதாவது நல்வினை செய்து கொண்டுபோவாயாக எனப் பொருள்படுகின்றது. எனவே செய்த வினைக்கேற்ப பலன் கிடைக்கும் என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது.
ஆன்மாவிற்கு மறுபிறப்பு உண்டு என்ற கருத்து வேதங்களின் முற்பகுதியில் கானபடவில்லையாயினும் வேதத்தின் இறுதிப்பகுதியாகிய உபநிடதத்திலே இவை பற்றிய கருத்துக்கள் காணப்படுகின்றன. உலகம் உண்மையானது என்பதுதான் வேதத்தில் உள்ள கருத்து அத்துடன் அறிவுடைய ஒருவரே உலகத்தின் உற்பத்திக்குகாரணமானவன் என்பது வேதத்தின் கருத்தாகும்.ஆனால் அவன் அறிவற்ற சடப்பொருளாகிய உலகை எதில் இருந்து உற்பத்தி செய்தான். தன்னில் இருந்தா? அல்லது சடமாகிய மூலப்பொருளில் இருந்தா? என்ற வினாக்களுக்கு இரண்டு விடையையும் வேதத்தில் காணலாம்.
இறைவன் தன்னிடத்தில் இருந்து உற்பத்தி செய்தான் என்ற சங்கரர் கருத்தும், சடப் பொருளில் இருந்து படைத்தான் என்ற சித்தாந்தக் கருத்துக்களும் வேத காலத்தில் கூறப்பட்டுவிட்டன.
ஒழுக்கக் கருத்துகள்
இருக்கு வேதத்தில் ஒழுக்கம் அல்லது அறம் பற்றிய கருத்து ரிதம் என்ற கருத்திலேயே வருகின்றது. ரிதம் என்பது உண்மை எனப் பொருள்படும்.இந்த ரிதக்தைக் காப்பவனாக இருக்குவேதம் ரிதசயகோபா என்ற பெயரில் வருணனை அதற்குரியவன் என்று சுட்டுகின்றது. நதி ஒழுங்காகப் பாய்வதற்கும் பருவகாலம் வருவதற்கும், பிரபஞ்ச ஒழுங்கிற்கும் அதன் கட்டுபாடான வரையறைக்கும் வருணன் தலைவனாவான். இவன் சூரியனைக் கண்ணாகக் கொண்டு மக்களைக் கண்காணிக்கின்றான். பாவம் செய்தவர்களை வருணன் தண்டிப்பதாகவும், பாவமன்னிப்பு செய்பவர்களை ஏற்றுக்கொள்வதாகவும் கூறப்படுகின்றது.
எனவே ஒழுக்கம் பற்றிய கருத்து வேதத்தில் எவ்வளவு முக்கியத்துவமுடையதாக இருக்கின்றது என்பதை அறியலாம். வேதத்தில் ஒழுக்கம் பற்றிய எல்லாக் கருத்துகளும் கூறப்பட்டுள்ளதால்தான் மனுதர்மசாஸ்திரம் “வேதகிலோ தர்ம மூலம்’’ எனக் கூறுகின்றது.அதாவது சகல தர்மங்களுக்கும் மூலம் வேதமே ஆகும்.